போலீஸ்காரர் உள்பட 7 பேருக்கு தொற்று குமரியில் கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியது
போலீஸ்காரர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.
நாகர்கோவில்,
போலீஸ்காரர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக இருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதாவது போலீஸ்காரர் ஒருவரும், வங்கி மேலாளர் ஒருவரும் உள்பட 7 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் போலீஸ்காரர் உதயமார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் திருவள்ளூரில் பணியாற்றி வருகிறார். தற்போது திருவள்ளூரில் இருந்து திருவனந்தபுரம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் களியக்காவிளை வந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
100-ஐ தாண்டியது
நாகர்கோவில் பட்டகசாலியன்விளையை சேர்ந்த வங்கி மேலாளர், கர்நாடகாவில் பணியாற்றி வருகிறார். அவர் விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வந்தார். அவரை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி விடுதியில் தங்க வைத்தனர். அதன் பிறகு அவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்தது. இதுபோன்று பல்வேறு இடங்களில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து 7 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதன்மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி 106 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பூரண குணம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 5 பேரும் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.