விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்யாது திருச்சியில் எச்.ராஜா பேட்டி
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்யாது என திருச்சியில் எச்.ராஜா தெரிவித்தார்.
திருச்சி,
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்யாது என திருச்சியில் எச்.ராஜா தெரிவித்தார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு நடவடிக்கை
2-வது முறையாக நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை பா.ஜனதா அரசு செயல்படுத்தியுள்ளது. பிரதமர் அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு நேரடியாக செல்கிறது.ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் 50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் மோடி அரசு தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து மாநில அரசுகளுக்கும் முக்கிய பங்குண்டு. ஜனவரி மாதத்தில் முககவசம், பாதுகாப்பு உடை ஆகியவை தயாரிக்கப்படவில்லை. ஆனால் தற்போது பல லட்சம் அளவில் அவை தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் 610 பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
ரத்து ஆகாது
மத்திய அரசு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய உள்ளது என சிலர் பிரசாரம் செய்கிறார்கள். அதில் உண்மையில்லை. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது.
புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் அவசரப்பட்டு நடக்கக் கூடாது. அவர்கள் பொறுமையோடு இருக்க வேண்டும். ரெயில் வசதி அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் மதவெறி உள்ளது. பா.ஜனதாவிடம் அது இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து மத வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும். கோவில்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக யாரும் பணிக்கு செல்லவில்லை. அதனால் கோவில் ஊழியர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. உடனடியாக அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிர்வாகிகள், அணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் எச்.ராஜா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், இணை பொறுப்பாளர் இல.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.