திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் தீ விபத்து: பஞ்சு மெத்தை குடோன்-கார் எரிந்து நாசம்

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மெத்தை குடோன் காருடன் எரிந்து நாசமானது.

Update: 2020-06-06 22:21 GMT
திருச்சி, 

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மெத்தை குடோன் காருடன் எரிந்து நாசமானது.

பஞ்சு மெத்தை குடோன்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரில் பஞ்சு மெத்தைகள் தயாரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. கேரளாவை சேர்ந்த நாசர் என்பவருக்கு அந்த குடோன் சொந்தமானதாகும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பஞ்சு மெத்தை குடோனுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் குடோனில் உரிமையாளருக்கு சொந்தமான காரும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

எரிந்து நாசம்

தொடர்ந்து 70 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பஞ்சு மெத்தை குடோன் நேற்று திறக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் வந்தனர். அப்போது மின்சார சுவிட்சுகளில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

குடோனில் மெத்தை தயாரிப்பதற்காக ஏராளமான பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்தன. தீப்பொறிகள் பஞ்சு மீது விழுந்து மளமளவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இந்த தீ குடோன் முழுவதும் பரவியதால் அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் கார் ஆகியவையும் எரிந்து நாசமானது.

தீயணைப்பு படை வீரர்கள்

தகவல் அறிந்ததும் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்கியூராஜா தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் மெத்தைகள், கார் ஆகியன எரிந்து சேதமானதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்