2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

2 பெண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-06-06 21:44 GMT
சேதுபாவாசத்திரம்,

சேதுபாவாசத்திரம் அருகே காதல் மனைவி கோபித்து சென்றதால் 2 பெண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதல் திருமணம்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள இரண்டாம்புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன்(வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா(26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வருனிகாஸ்ரீ(7), ஜனனிகாஸ்ரீ(5) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமக சுகன்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த 1 ஆண்டாக வசித்து வருகிறார். மனைவி கோபித்துச்சென்ற பின்னர் கதிரவன் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். மேலும் தனது மனைவியை தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சுகன்யா மீண்டும் அவருடன் குடும்ப நடத்த வரமுடியாது என்று கூறியதாக தெரிகிறது.

விஷம் கொடுத்து கொலை

இதனால் மனம் உடைந்த கதிரவன் கடந்த 4-ந் தேதி தனது 2 குழந்தைகளுக்கும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கதிரவன் மற்றும் அவரது குழந்தைகள் உள்பட 3 பேரையும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கதிரவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்ததால் தான் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தொழிலாளி தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்