மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் காரில் கடத்தல்
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை,
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் மகன்
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள வெங்கக்கல்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் கரூர் மாவட்டப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அரவிந்த் (வயது 26), சம்பவத்தன்று தனது நண்பரான சரத்குமாருடன் ஒரு மோட்டார் சைக்கிளிலும், மற்ற நண்பர்களான ராஜா (25) மற்றும் சிவா ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும், திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் குளித்தலை சுங்ககேட் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக காரில் வந்த 5 பேர் ராஜாவை வழிமறித்து, தகராறு செய்து தாக்கியுள்ளனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி, பிரச்சினையை முடித்து அனுப்பி வைத்துள்ளனர்.
காரில் கடத்தல்
பின்னர் அரவிந்த் மற்றும் அவர்களது நண்பர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் சென்றுகொண்டிருந்தபோது, ஏற்கனவே காரில் வந்து தகராறு செய்தவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ராஜா மற்றும் சிவாவை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து அரவிந்த் மற்றும் சரத்குமார் கேட்டபோது, காரில் வந்த நபர்கள் இரும்பு கம்பியால் அரவிந்தை தாக்கியதோடு மட்டுமில்லாமல் அவரையும், ராஜாவையும் காரில் கடத்தி சென்றனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இறக்கி விட்டு சென்றனர். இதில் காயம் அடைந்த அரவிந்த் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, காரில் வந்த நபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அரவிந்த் மற்றும் ராஜாவை கடத்தி சென்றனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.