ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகம் முற்றுகை
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்க கோரி கிராமமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அச்சம்தவிர்தான் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி அந்த கிராமத்தினர் மற்றும் ராமலிங்கபுரம், அனைத்துலபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வேதநாயகம் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மனு
பின்னர் அவர்கள் அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் வாசல்படியில் அமர்ந்து கோஷம் போட்டனர். அதை தொடர்ந்து அவர்கள் யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரி(திட்டம்) வசந்தகுமாரை சந்தித்து, அனைவருக்கும் பாகுபாடின்றி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். கிராமமக்கள் கோரிக்கை மனு கொடுக்க யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் நேற்று யூனியன் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.