தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பூங்கொத்துடன் மனு கொடுக்க வந்த பந்தல் அமைப்பாளர்கள்
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பந்தல் அமைப்பாளர்கள் பூங்கொத்துடன் வந்து மனு கொடுத்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பந்தல், மைக்செட் அமைப்பாளர்கள் மற்றும் அலங்கரிப்பாளர்கள் நேற்று கைகளில் பூங்கொத்துகளுடன் திரண்டு வந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், கொரோனா ஊரடங்கால் திருமண மண்டபங்களில் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், பந்தல், மைக்செட், மேடை அலங்காரங்கள் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே மனு அளித்திருந்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தெரிவித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவை கைவிட்டு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். அதில், பந்தல், மைக்செட் அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், திருமண மண்டபங்களில் விழாக்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.