மயிலாடுதுறை அருகே கர்ப்பிணி மர்மச்சாவு வரதட்சணை கொடுமையா? உதவி கலெக்டர் விசாரணை
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே வேலம்புதுகுடியை சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பாலையூர்,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே வேலம்புதுகுடியை சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திருவிடைமருதூர் அம்மன்குடியை சேர்ந்த சீத்தாராமன் மகள் வர்ஷா(21) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
தற்போது வர்ஷா 2 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில் மணமகன் வீட்டார் வர்ஷாவிடம் உங்கள் வீட்டில் இருந்து கார் மற்றும் நகைகள் வாங்கி வரவேண்டும் என கூறி அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் காலை வர்ஷா, இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் மாலை வர்ஷா தற்கொலை செய்துகொண்டதாக மணமகன் வீட்டார் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து வர்ஷாவின் தந்தை சீதாராமன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் வீட்டார் தனது மகளை கொடுமைப்படுத்தியதாகவும் பெரம்பூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வர்ஷாவிற்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி விசாரணை நடத்தி வருகின்றனர்.