டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டதை கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடிய பெண் போலீசில், கணவர் புகார்
டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டதை கண்டித்ததால் மனைவி வீட்டை விட்டு ஓடி விட்டதாக திருத்துறைப்பூண்டி போலீசில் அந்த பெண்ணின் கணவர் புகார் செய்து உள்ளார்.
திருத்துறைப்பூண்டி,
டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டதை கண்டித்ததால் மனைவி வீட்டை விட்டு ஓடி விட்டதாக திருத்துறைப்பூண்டி போலீசில் அந்த பெண்ணின் கணவர் புகார் செய்து உள்ளார்.
இப்படியும் ஒரு சம்பவம்
குடும்ப தகராறில் கணவருடன் கோபித்துக்கொண்டு மனைவி வீட்டை விட்டு ஓடியதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டதை கணவர் கண்டித்ததால் மனைவி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் திருத்துறைப்பூண்டி அருகே நடந்துள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
டிக்-டாக்கில் வீடியோ வெளியீடு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் வசித்து வருபவர் வெங்கடேசன்(வயது 40). இவர், பிளம்பர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி(35) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெங்கடேசன் வேலைக்கு சென்ற நேரத்தில் தேவி தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை டிக்-டாக் செயலியில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த வெங்கடேசன் குடும்ப பெண் இதுபோன்ற வேலையெல்லாம் செய்யக்கூடாது என்று தனது மனைவியை கண்டித்துள்ளார்.
போலீசில் புகார்
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை திட்டிவிட்டு வெங்கடேசன் வேலைக்குசென்று விட்டார். வேலை முடிந்து வெங்கடேசன் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மனைவி வீட்டில் இல்லை. அவரை பல்வேறு இடங்களிலும் வெங்கடேசன் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் வெங்கடேசன் திருத்துறைப்பூண்டி போலீசில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகின்றனர்.