அரசு மருத்துவமனையில் பொருட்கள் சேதம்: டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு

திருவையாறு அருகே அரசு மருத்துவமனையில் பொருட்களை சேதப் படுத்தி, டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-06-05 22:30 GMT
திருவையாறு,

திருவையாறு அருகே அரசு மருத்துவமனையில் பொருட்களை சேதப் படுத்தி, டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிகிச்சை அளித்த அரசு டாக்டர்

திருவையாறை அடுத்த நடுக்காவேரி அரச மரத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 58). சர்க்கரை நோயினால் அவதிப்பட்ட இவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவரது உறவினர்கள் நடுக்காவேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது பணியில் இருந்த டாக்டர் அன்பரசன், குமாருக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படியும், 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்கும் படியும் கூறினார்.

கொலை மிரட்டல்

இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த சாமிவேல், பிரகலாதன் மகன்கள் தினேஷ்குமார், அருண்குமார் உள்பட 4 பேரும் மருத்துவமனைக்கு வந்து 108 ஆம்புலன்ஸ் உடனே வராதா? என கேட்டு டாக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள், மின்விசிறி உள்பட பல்வேறு பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.

தொடர்ந்து அவர்கள் டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் குமாரை, மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார மருத்துவர் கார்த்திகேயன் நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சாமிவேல் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றார்.

மேலும் செய்திகள்