ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை மீறி மகளிர் குழுக்களிடம் தவணை தொகை வசூலித்தால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை மீறி மகளிர் குழுக்களிடம் தவணை தொகையை வசூலிக்கும் நுண்கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-06-05 05:37 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் நுண்கடன் நிறுவனங்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மகளிர் குழுக்கள், பொதுமக்களிடம் தவணை தொகையை செலுத்த நிர்பந்தம் செய்வதாக மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனுக்கு புகார்கள் வந்தன.

இதைதொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் குழுக்கள் நுண்கடன் நிறுவனங்களில் கடன் பெற்று மாதந்தோறும் கடன் தவணைத் தொகையினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் மகளிர் குழுக்கள் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் மாதாந்திர தவணைத் தொகையினை திரும்ப செலுத்த இயலாத நிலையில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிசர்வ் வங்கியின் 27.3.2020 மற்றும் 22.5.2020-ம் தேதியிட்ட சுற்றறிக்கைகளின்படி, மகளிர் குழுக்கள் பெற்ற கடன் உள்பட அனைத்து கடன் தொகைகளுக்கான மாதாந்திர தவணைத்தொகை செலுத்துவதற்கு, மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை 6 மாத காலம் அவகாசம் அளித்து அறிவிப்பு செய்துள்ளது.

நடவடிக்கை

எனவே, ரிசாவ் வங்கியின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் நுண்கடன் நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகைக்கான மாதாந்திர தவணைத் தொகையினை அனுமதி அளிக்கப்பட்ட கால அவகாசத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறது.

மேலும், மகளிர் குழுக்களை தவணைத் தொகை செலுத்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை நிர்ப்பந்திக்கக்கூடாது, வசூலிக்க கூடாது, அப்படி நிர்பந்திக்கும் நுண்கடன் நிறுவனங்கள் மீது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்