விருதுநகர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 167-ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை 7 சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளிலும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் வரை 10,239 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 375 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 90 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தனிமைப்படுத்தும் முகாம்களில் 340 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
8 பேர்
இந்தநிலையில் நேற்று பெண் தூய்மை பணியாளர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விருதுநகர் அருகே உள்ள புல்லலக்கோட்டை பஞ்சாயத்தில் பணியாற்றும் 36 வயது பெண் தூய்மை பணியாளருக்கு நோய் தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், அவரது சகோதரர் 15 வயது சிறுவனுக்கும், அல்லம்பட்டியை சேர்ந்த 31 வயது நபருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேருமே அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட நோய் தொற்றுகாரணமாக பாதிப்பு அடைந்தவர்கள்.
உயர்வு
விருதுநகர் ஆவுடையாபுரம் சுப்பையாபுரத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய 35 வயது பெண்ணுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசி ஈஞ்சார் பகுதியை சேர்ந்த 32 வயது நபருக்கும், அவரது 30 வயது மனைவிக்கும், திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல் குளத்தை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கும் நோய் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்கள் 4 பேருமே சென்னையில் இருந்து திரும்பியவர்கள்.
இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தநிலையில் தற்போது கிராமப்பகுதியிலும், நகர்பகுதியிலும் வசிப்பவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கி உள்ளது. பெண் தூய்மை பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பணி செய்த இடங்களில் நோய் பரவுதலுக்கு வாய்ப்பு உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.