வெண்ணைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் கோவில் வெறிச்சோடி கிடந்தது.
கரூர்,
கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் கோவில் வெறிச்சோடி கிடந்தது.
வைகாசி விசாக திருவிழா
கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படும். இதில் முருகப்பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாக திருவிழா சிறப்பு வாய்ந்தது. வைகாசி விசாக தினத்தன்று முருகப்பெருமானை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, அன்றைய தினம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடிக் கிடக்கின்றன. அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை.
சிறப்பு பூஜைகள்
வைகாசி விசாக திருநாளான நேற்று கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது. ஆனால், கொரோனா ஊரடங்கால், பக்தர்களை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் யாரும் இன்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கோவிலை சுற்றிலும் யாரும் படிக்கட்டுகள் வழியாக மேலே செல்வதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் கோவில் முன்பு நின்று கொண்டு முருகனை தரிசித்து விட்டு சென்றனர்.