நவிமும்பையில் பட்டப்பகலில் பயங்கரம் கட்டுமான ஒப்பந்ததாரர் சுட்டுக்கொலை

நவிமும்பையில் பட்டப்பகலில் கட்டுமான ஒப்பந்ததாரர் மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டார்.

Update: 2020-06-05 00:59 GMT
மும்பை,

நவிமும்பை தாலவலி பகுதியை சேர்ந்தவர் பிரவின் தாயடே (வயது40). கட்டுமான ஒப்பந்ததாரர். இவர் நேற்று மதியம் கன்சோலி- தாலவலி ரோட்டில் மோட்டாா் சைக்கிளில் ஒருவருடன் சென்று கொண்டு இருந்தார். தாலவலி பாலம் அருகே சென்ற போது மர்மநபர் பிரவின் தாயடே மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் முகத்தில் குண்டு பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார்.

மோட்டார் சைக்கிள் தடுமாறி விழுந்ததால் கட்டுமான ஒப்பந்ததாரருடன் பின்னால் வந்தவர் காயமடைந்தார்.

இந்தநிலையில் கட்டுமான ஒப்பந்ததாரரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி தப்பி சென்றார்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் பலியான பிரவின் தாயடேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த நபரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் பங்கஜ் தகானே கூறுகையில், ‘‘முதல் கட்ட விசாரணையில் கன்சோலி, தாலவலி பகுதியில் நடந்த கட்டுமான பணிகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது’’ என்றார்.

மேலும் செய்திகள்