குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
மழை நீடிப்பு
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 7 மணி அளவில் மழை பெய்தது. அதன் பிறகு மழை சற்று ஓய்ந்து காணப்பட்டது. ஆனால் வெயில் அடிக்காமல் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.
அதே சமயம் குமரி மேற்கு மாவட்ட பகுதி, மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்தது.
அணை நிலவரம்
ஆனால் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்ததால், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. அதாவது நேற்று முன்தினம் 2,203 கனஅடி தண்ணீர் வந்த பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 711 கன அடியாக குறைந்தது.
இதே போல 1,289 கன அடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 442 கன அடி தண்ணீர் வந்தது. 400 கனஅடி தண்ணீர் வந்த சிற்றாறு-1 அணைக்கு 100 கன அடியும், 616 கனஅடி தண்ணீர் வந்த சிற்றார்-2 அணைக்கு 149 கன அடியும், 13 கனஅடி தண்ணீர் வந்த மாம்பழத்துறையாறு அணைக்கு 8 கன அடியும் தண்ணீர் வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த நிலையில் சிற்றார்-1 மற்றும் சிற்றார்-2 அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அதாவது 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் தற்போது 13.51 அடியாகவும், அதே அளவு கொள்ளளவு கொண்ட சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 13.61 அடியாக இருக்கிறது.
எனவே அணைகளில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் செல்லும். ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடு கிறது. இந்த நிலையில் அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதேபோல பரளியாறு, குற்றியாறு மற்றும் பழையாற்று கால்வாய் ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகளவு செல்கிறது.
மழை அளவு
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-10, பெருஞ்சாணி-2, சிற்றார்1 -10, சிற்றார்2 -12, மாம்பழத்துறையாறு-13, புத்தன்அணை-2, முள்ளங்கினாவிளை-8, அடையாமடை-8, கோழிப்போர்விளை-8, நாகர்கோவில்-2.2 , பூதப்பாண்டி-7.2, சுருளோடு-2.6, கன்னிமார்-2.2, பாலமோர்-12.6, குளச்சல்-12.6, இரணியல்-8.6, ஆனைக்கிடங்கு-16.6, குருந்தன்கோடு-5 மற்றும் திருவட்டார்-6.4.