கூடலூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட பொன்வயல் கிராமத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு

கூடலூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட பொன்வயல் கிராமத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.

Update: 2020-06-04 23:29 GMT
கூடலூர், 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பொன்வயல் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவின்பேரில் பொன்வயல் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தவிர கொரோனா பாதித்த இளம்பெண்ணின் தாய், தந்தை, உறவினர்கள் உள்பட கிராமத்தில் உள்ள அனைவருக்கும் சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. எனினும் தொடர்ந்து அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தனிமைப்படுத்தப்பட்ட பொன்வயல் கிராமத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். கிராமத்துக்கு செல்லும் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தார். கொரோனா பாதித்த இளம்பெண்ணின் வீட்டுக்கும், மற்ற வீடுகளுக்கும் எவ்வளவு இடைவெளி உள்ளது? என்பதை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் வசிக்கும் 26 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை கலெக்டர் வழங்கினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி, நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் லீனாசைமன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் குமாரமங்கலம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்