சேலத்தில் தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை

சேலத்தில் தனியார் நிதி நிறுவனத்தை அதன் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தவணை தொகைக்கு அபராதம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர்.

Update: 2020-06-04 06:44 GMT
சேலம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்ததால் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை இழந்தனர். இதனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வீடு, வாகன கடன் பெற்றவர்கள் மாதாந்திர தவணை தொகை செலுத்துவதில் தளர்வு செய்து மத்திய அரசு அறிவித்தது.

அதாவது, மாதாந்திர தவணை தொகையை வசூலிக்க தனியார் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நிர்ப்பந்திக்க கூடாது என்றும், இது சம்பந்தமாக எந்தவித அபராத கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை கடைபிடித்து வருகின்றன. ஆனால் சில தனியார் நிதி நிறுவனங்கள் மட்டும் மாதாந்திர தவணை தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவதை கட்டாயமாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

அந்த வகையில் சேலம் 5 ரோடு அருகே இயங்கி வரும் சில தனியார் நிதி நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே கொடுத்த வங்கி காசோலைக்கு அபராத தொகையை பல மடங்கு வசூல் செய்தது தெரியவந்துள்ளது. வங்கியில் பணம் இல்லை என்று தெரிந்தே வங்கிகளில் காசோலையை டெபாசிட் செய்து அதற்கான தொகை இல்லாதபோது அதற்கு அபராத தொகை வசூல் செய்யும் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் நேற்று சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வங்கி காசோலைக்கான அபராத கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது:-

மத்திய அரசின் அறிவிப்பின்படி தவணைத் தொகை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நினைத்து தங்களது பணத்தை உரிய நேரத்தில் வங்கியில் செலுத்த முடியவில்லை. அதற்கு வங்கி காசோலை கட்டணமாக பல மடங்கு வசூல் செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் பணம் இருந்தும் அதனை தவணை தொகைக்காக எடுத்துக்கொள்ளாமல் காசோலை அபராத கட்டணம் மட்டுமே வசூலிப்பதில் குறியாக உள்ளனர்.

ஒரே ஒரு காசோலையை பலமுறை டெபாசிட் செய்து அதற்கு நான்கு மற்றும் ஐந்து முறை தலா ரூ.590 வீதம் பணம் எடுப்பது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலத்தில் தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்