சத்தி ரோடு பகுதியில் சாக்கடை அடைப்பு; பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்தது
சத்தி ரோடு பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால், பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்தது.
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் உத்தரவின் படி இந்த பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. கொரோனா பாதுகாப்பு பணி, டெங்கு கொசு ஒழிப்பு பணி என்று பல்வேறு பணிகளிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதால் சாக்கடை தூய்மைப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு உள்ளன.
ஈரோடு சத்தி ரோடு பகுதியை பொறுத்தவரை இங்கு சாக்கடை கால்வாய் பெரிய அளிவில் உள்ளது. இங்குள்ள கடைகள், குடியிருப்பு பகுதிகள் என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் கழிவுகள் இந்த சாக்கடை வழியாக வெளியேறுகிறது. இந்த பகுதியில் பாதாளசாக்கடை இணைப்பு முழுமை பெறாததால் மொத்த கழிவுகளும் சாக்கடை கால்வாய் வழியாகத்தான் செல்கின்றன.
கடைகளில் இருந்து வெளியே வீசப்படும் பாலித்தீன்கள், இரவில் குடிமகன்கள் வீசப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், மது பாட்டில்கள் இன்னும் ஏராளமான கழிவுகள் இந்த சாக்கடை வழியாக செல்வதால் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுவது வழக்கம். சாதாரண நாட்களில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சிறிய அளவில் மழை பெய்தாலும், மழை நீர் செல்ல வழியில்லாமல் சாக்கடை நிரம்பி கழிவுகள் சாலையில் பாய்ந்து ஓடும். சுவஸ்திக்கார்னர் பகுதியில் வ.உ.சி.பூங்கா ரோடு இணைப்பு, மல்லிகை அரங்கம் சாலை இணைப்பு ஆகிய இடங்களில் அடிக்கடி சாக்கடை பொங்கி வழியும்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை பெய்ததில் சத்தி ரோடு மல்லிகை அரங்கம் செல்லும் வி.சி.டி.வி. ரோடு பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய நேற்று மாநகராட்சி பணியாளர்கள் வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வங்கியின் முன்பகுதியில் சாக்கடையை மூடி அடைப்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு, பொக்லைன் எந்திரம் மூலம் அதை இடித்துத்தள்ளினார்கள். பின்னர் சாக்கடை தூர்வாரப்பட்டது.