திருப்பூரில் காரில் 15 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது
திருப்பூரில் காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் 15 வேலம்பாளையம் 25 முக்கு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார், போலீசார் மகாராஜன், கார்த்திகேயன், பழனிக்குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் மறித்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த காரில் இருந்த மூட்டையில் கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பதும், காரில் வந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
4 பேர் கைது
விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 40), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செல்லத்துரை (34), திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த ஹரீஸ் (34), காந்திநகரை சேர்ந்த ரகு (30) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் ஆந்திராவில் இருந்து அவினாசி வழியாக கடத்தி கொண்ட வரப்பட்ட அந்த கஞ்சாவை ஒட்டன்சத்திரம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் 3-வது ஜூடிசியில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 15 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கமிஷனர் பாராட்டு
கைது செய்யப்பட்ட 4 பேரில் சரவணன் மீது திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கஞ்சா வழக்குகள் இருப்பதும், செல்லத்துரை ஹரீஷ், ரகு ஆகிய 3 பேர் மீதும் திருப்பூர் வடக்கு, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது, திருப்பூரில் 15 கிலோ கஞ்சாவை காரில் கடத்திய 4 பேர் கும்பலை அதிரடியாக கைது செய்த அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர ராஜன் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர் பத்ரிநாராயணன் ஆகியோர் பாராட்டினர்.