வட்டி கேட்டு மிரட்டல்: தனியார் நிறுவனங்கள் மீது சுய உதவிக்குழுவினர் புகார்

வட்டி கேட்டு மிரட்டுவதாக தனியார் நிறுவனங்கள் மீது சுய உதவிக்குழுவினர் புகார் அளித்துள்ளனர்.

Update: 2020-06-04 04:43 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் பானாம்பட்டு மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் அதன் தலைவி நாகலட்சுமி தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை மதித்து நாங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்தோம். இதனால் வேலைக்கு செல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். சகஜ வாழ்க்கைக்கு நாங்கள் திரும்பி வேலைக்கு சென்றால்தான் தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை அடைக்க முடியும்.

இதற்கு குறைந்தது 3 மாத காலம் அவகாசம் தேவைப்படும். இந்த சூழலில் நாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டி தொகையை கேட்டு எங்களை தனியார் நிறுவனத்தினர் மிரட்டி வருகின்றனர்.

எனவே 6 மாத காலம் எங்களிடம் கடனுக்கான வட்டி தொகையை கேட்டு மிரட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்