மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 33 பேர் கைது

சேலத்தில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-06-04 03:53 GMT
சூரமங்கலம்,

சேலம் திருவாக்கவுண்டனூர் சுகுமார் காலனியை சேர்ந்தவர் சரவணன். இவர், கடந்த மாதம் வீட்டில் மர்மமான முறையில் இறந்ததாகவும், அவரது மரணத்துக்கு நீதி கேட்டு திருவாக்கவுண்டனூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஞானசவுந்தரி, இருதயசாமி ஆகியோரை சூரமங்கலம் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வாலிபர் சரவணன் சாவுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ் தலைமையில் சூரமங்கலம் போலீசாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் சிங்காரவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், ஞானசவுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஊரடங்கு அமலில் உள்ளதால் எந்த போராட்டமும் நடத்த அனுமதி கிடையாது என்றும், அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

இருப்பினும் தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட மொத்தம் 33 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கு போலீஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு கைதானவர்களை போலீசார் வேனில் ஏற்றினர். அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்