தொழிலாளர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்ககோரிய மனு தள்ளுபடி

தொழிலாளர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்ககோரிய மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2020-06-04 03:18 GMT
மதுரை,

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பிரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவராக உள்ளேன். விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை கட்டுமான தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், பட்டாசு தொழிற்சாலைகள், நூற்பாலைகள், அச்சகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களே அதிகமாக உள்ளனர். நோய் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் அவர்கள் வேலைக்கு செல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில், அரசு ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது. தற்போதைய சூழலில் இது போதுமானது அல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கான மருத்துவ செலவுகள் உள்ளன. அதே போல அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

நிவாரண தொகை

இந்த சூழலில் அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் என்பது மூன்று நேர உணவை கூட முழுதாக உண்ண போதுமானதாக இல்லை. எனவே இவற்றையும் உயர்ந்து வரும் விலைவாசியையும் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கையை வலியுறுத்திய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே இங்கு இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்