நெல்லை-தூத்துக்குடியில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தென்காசியில் 4 பேருக்கு தொற்று உறுதி
நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
நெல்லை,
நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
12 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியை சேர்ந்த 2 பெண்கள், மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 2 பேர், பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியை சேர்ந்த ஒருவர், உடையார்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் என நெல்லை மாநகர பகுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 6 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.
279 பேர் வீடு திரும்பினர்
இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 366 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று 12 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 378 ஆக அதிகரித்து உள்ளது.
இவர்களில் 279 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 98 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் இறந்து உள்ளார்.
தூத்துக்குடியில் 17 பேர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நேற்று தென்திருப்பேரை பகுதியை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தென்திருப்பேரை பகுதியில் இதுவரை சுமார் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை கொரோனா சிகிச்சை பெற்ற 157 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்து உள்ளனர். 135 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசியில் 4 பேருக்கு தொற்று
தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதில் 3 பேர் தென்காசி பகுதியை சேர்ந்தவர்கள். ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆகும். இதில் 73 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 21 பேர் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.