மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதலன் வீடுபுகுந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதலன் வீடு புகுந்து மிரட்டியதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-06-04 01:42 GMT
குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதலன் வீடு புகுந்து மிரட்டியதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

காதல் திருமணம்

மார்த்தாண்டம் அருகே விரிகோடு, முண்டவிளையை சேர்ந்தவர் ரமா (வயது 25). இவரும் சாங்கை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உண்டு. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இதையடுத்து ரமா தனது குழந்தையுடன் முண்டவிளையில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்து குழித்துறையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

விஷம் குடித்தார்

இந்தநிலையில், நேற்று முன்தினம் ரமா வேலைக்கு சென்ற கடையில் இருந்து முன்னதாகவே வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், ரமாவின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, அவரது கையில் ஜேம்ஸ், வின்ஸ் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

கள்ளக்காதல்

ரமா குழித்துறை பகுதியில் வேலை பார்த்து வந்த போது ஜேம்ஸ் என்பவருடன் பழக்்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்தனர். இதையடுத்து ரமா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜேம்சிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு ஜேம்ஸ் மறுத்ததாகவும் தெரிகிறது.

இந்தநிலையில், சம்பவத்தன்று ஜேம்ஸ் அவரது அண்ணன் வின்ஸ் ஆகியோர் ரமாவின் வீடு புகுந்து அவரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டினர். இதனால், மனமுடைந்த ரமா விஷம் குடித்து தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ், வின்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்