விடிய விடிய மழை: குமரி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு பேச்சிப்பாறைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
விடிய விடிய மழை
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. நேற்று முன்தினமும் இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. அதோடு இல்லாமல் நேற்று காலையும் மழை பெய்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், மலையோர பகுதிகள் மட்டும் அல்லாமல் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
நீர்மட்டம் உயர்வு
மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. அதாவது பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 478 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று 2 ஆயிரத்து 203 கன அடியாக அதிகரித்தது. 263 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 1,289 கன அடி தண்ணீர் வந்தது. 100 கனஅடி தண்ணீர் வந்த சிற்றாறு-1 அணைக்கு 400 கன அடியும், 143 கனஅடி தண்ணீர் வந்த சிற்றார்-2 அணைக்கு 616 கன அடியும், 3 கனஅடி தண்ணீர் வந்த மாம்பழத்துறையாறு அணைக்கு 13 கன அடியும் தண்ணீர் வருகிறது.
அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வருவதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது. இதனால் நேற்று முன்தினம் 41.10 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2¾ அடி உயர்ந்து 43.85 அடியானது. இதுபோல மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மேலும் குளங்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதே போல பழையாற்று கால்வாயிலும் தண்ணீர் செல்கிறது. இதனால் சபரி, குமரி மற்றும் சோழன்திட்டை உள்ளிட்ட தடுப்பணைகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது.
மரம் விழுந்தது
நாகர்கோவிலில் நேற்று காலை மழை பெய்யும் போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் மாநகரில் முக்கிய பகுதியான மணிமேடை அருகே ஒரு பழமை வாய்ந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் தடைபட்டது.
இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து மின்கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.
மழை அளவு
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 51.4, பெருஞ்சாணி 64.2, சிற்றார்-1 80, சிற்றார்-2 52, மாம்பழத்துறையாறு 20, புத்தன் அணை 63.6, முள்ளங்கினாவிளை60, அடையாமடை 22, கோழிப்போர்விளை 28, நாகர்கோவில் 6.2 , பூதப்பாண்டி 3.6, சுருளோடு 41.2, கன்னிமார் 2.2, பாலமோர் 32.2, கொட்டாரம் 7.2, மயிலாடி 11.2, குளச்சல் 24, இரணியல் 18.6, ஆனைக்கிடங்கு 11.2, குழித்துறை 6, முக்கடல்13.4, ஆரல்வாய்மொழி 2, களியல் 12.4, தக்கலை 23, குருந்தன்கோடு 10 மற்றும் திற்பரப்பு 24 என்ற அளவில் மழை பெய்திருந்தது.