பெரிய மார்க்கெட்டில் மீண்டும் காய்கறி கடைகள் திறப்பு

புதிய பஸ் நிலையத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி கடைகள் மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டு நேற்று கடைகள் திறக்கப்பட்டன.

Update: 2020-06-03 22:33 GMT
புதுச்சேரி,

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதுவையிலும் அரசு எல்லைகளை மூடி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. மதுக்கடை மூடல், பஸ் போக்குவரத்து ரத்து, திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன.

இதன் ஒரு அம்சமாக பெரிய மார்க்கெட் மூடப்பட்டு அங்கிருந்த காய்கறி கடைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய பஸ் நிலையம், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி ஆகிய இடங்களில் பிரித்து விடப்பட்டு செயல்பட்டு வந்தன. நேரு வீதிக்கு பழக்கடைகள் மாற்றப்பட்டன.

புதிய பஸ் நிலையத்தில் இடவசதி இருந்ததால் கட்டங்கள் வரைந்தும், தடுப்புகள் அமைத்தும் வியாபாரம் நடந்து வந்தது. மக்களும் தடையின்றி வந்து சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை வாங்கிச்சென்றனர். கடந்த 2 மாதங்களாக இதே நிலை நீடித்தது.

இந்தநிலையில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து பஸ்களை இயக்க புதுவை அரசு அனுமதி அளித்தது. ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றி 20 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும் என்பதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து விட்டனர். இதனால் அரசு பஸ்கள் மட்டும் உள்ளூருக்குள் சென்று வருகின்றன.

தற்போது கடலூர் போன்ற வெளியூர்களுக்கு பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதையொட்டி பஸ் நிலையத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த காய்கறி கடைகள் அரசு உத்தரவின்பேரில் மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டன. நேற்று முதல் வழக்கம்போல் அங்கு காய்கறி கடைகள் செயல்பட தொடங்கின.

பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். பெரிய மார்க்கெட்டுக்கு காய்கறி கடைகள் மாற்றப்பட்ட விவரம் பலருக்கு தெரியவில்லை. இதனால் முதல் நாளான நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. போதிய இடவசதி இல்லாத நெருக்கடியான இந்த இடத்தில் பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் அடுத்தடுத்த நாட்களில் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே மாற்று இடத்தில் சகல வசதிகளுடன் பெரிய மார்க்கெட்டை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்