பாடாலூர் அருகே பால் வியாபாரி அடித்து கொலை ரவுடி உள்பட 4 பேர் கைது
பாடாலூர் அருகே பால் வியாபாரியை அடித்து கொலை செய்த ரவுடி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்,
பாடாலூர் அருகே பால் வியாபாரியை அடித்து கொலை செய்த ரவுடி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தை சேர்ந்தவர் மணி(வயது 55). இவர் தெரணி கிராமத்தில் பால் வியாபாரம் மற்றும் வாகனங்களின் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி தனபால்(50), குமார்(40), சங்கர்(35), குண்டு பிரபு(40) ஆகிய 4 பேரும் முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு சம்பவத்தன்று மணியை பால் கறந்ததற்கான கூலி தருவதாக கூறி பிரபுவின் வயலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசி 4 பேரும் சேர்ந்து மணியை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் நிலை தடுமாறிய மணி சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்த தனபால் பட்டா கத்தியுடன் தெருவில் இறங்கி நடந்த சம்பவத்தை பற்றி போலீசாருக்கு யாராவது தகவல் கொடுத்தால் அவர்கள் குடும்பத்தையே அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
4 பேர் கைது
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மணியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த தனபால், குமார், சங்கர், குண்டு பிரபு ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.