ஊரடங்கால் எள் விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை
ஊரடங்கால் எள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஆதனக்கோட்டை,
ஊரடங்கால் எள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
எள் சாகுபடி
புதுக்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி, சோத்துப்பாழை, வளவம்பட்டி, கணபதிபுரம், வண்ணாரப்பட்டி, தொண்டைமான்ஊரணி, பெருங்களூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் 40 எக்டேர் பரப்பளவிற்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நீர் பாசன முறையில் எள் சாகுபடி செய்தனர். தற்போது அவை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு ஒரு குவிண்டால் எள் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரம் வரை விற்றது. ஆனால் தற்போது ரூ.8 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் வரையே விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் எள் மிட்டாய் கம்பெனிகள், எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் ஆட்டும் செக்குகள் இயங்காமல் இருந்ததாலேயே விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் வேதனை
தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் இந்நிறுவனங்கள் சரிவர இயங்காததால் எள் விலை ஏற்றம் காணாமல் உள்ளது. ஒரு ஏக்கருக்கு உற்பத்திக்காக 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், ஏக்கருக்கு மூன்று குவிண்டாலில் இருந்து நான்கு குவிண்டால் மட்டுமே விளைச்சல் இருப்பதாலும், விலை வீழ்ச்சியாலும், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த எள்ளிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று வேதனை அடைந்துள்ளனர்.