திருச்சியில் முதல் உயிரிழப்பு: கொரோனாவுக்கு மூதாட்டி பலி மாநகராட்சி ஊழியர் உள்பட 7 பேருக்கு தொற்று உறுதி

திருச்சியில் கொரோனாவுக்கு முதன் முதலாக மூதாட்டி பலியாகி உள்ளார். மாநகராட்சி ஊழியர், ரெயில் டிக்கெட் பரிசோதகர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2020-06-03 02:31 GMT
திருச்சி, 

திருச்சியில் கொரோனாவுக்கு முதன் முதலாக மூதாட்டி பலியாகி உள்ளார். மாநகராட்சி ஊழியர், ரெயில் டிக்கெட் பரிசோதகர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள்

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. முதன் முதலில் டெல்லியில் மதவழிபாட்டு மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 17 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. படிப்படியாக கொரோனா பரவல் அதிகரித்தாலும், ஒரு கட்டத்தில் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக திருச்சி மாவட்டம் மாறியது.

தாக்கம் குறையும் என எதிர்பார்த்த வேளையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிவிட்டு திருச்சி மாவட்டம் திரும்பியவர்களால் மேலும் கொரோனா தொற்று அதிகரித்தது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற இளம்பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். ஆனால், அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், ஆஸ்துமா, நிமோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொரோனாவுக்கு மூதாட்டி பலி

இந்த நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 74 வயது மூதாட்டி நேற்று பலியானார். இவர், கடந்த மாதம் 27-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே, ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா தாக்குதலாலும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இந்த மூதாட்டிதான் முதல் பலி. மூதாட்டியின் வீட்டுக்கு சென்னையில் இருந்து உறவினர் சிலர் வந்து சென்றுள்ளனர். அதன் மூலம் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் வசித்த இடமான ஆழ்வார்தோப்பு பகுதியில் சுகாதார பணியாளர்களால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

பில் கலெக்டர், டிக்கெட் பரிசோதகர்

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பணியாற்றும் பில் கலெக்டர் உள்பட 2 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி ஆனது. ஜீயபுரம் அருகே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு பில் கலெக்டர், சென்று வந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபோல திருச்சியில் ரெயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஒருவருக்கும், அவருடைய மனைவி மற்றும் ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி மற்றும் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோல் திருச்சி தில்லைநகர், ஒத்தக்கடை பகுதியில் தலா ஒருவருக்கும் என்று மொத்தம் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சம்

திருச்சியில் தற்போது ஊரடங்கில் பெரும்பாலும் தளர்வு ஏற்படுத்தப்பட்டு அனைத்து கடைகள் திறக்கப்பட்டும், 60 சதவீத பயணிகளுடன் பஸ்களும் இயக்கப்பட்டும் வருகிறது. இதனால், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிப்பதில்லை. முக கவசங்கள் அணிவதில்லை. எவ்வித கடிவாளமும் போடப்படாததால் கொரோனா தொற்று அதிகரித்தபடி உள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்