எடையில் மோசடி: ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை விதிமீறல் கடைகளுக்கு அபராதம்

மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி, எடைகுறைவாக பொருட்களை வினியோகம் செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2020-06-03 01:58 GMT
மதுரை, 

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்றுமுன்தினம் ஒரு ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு எடை குறைவாக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை கமிஷனர் உத்தரவுப்படி, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர் வழிகாட்டுதலின்படி, மதுரை மண்டலத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தொழிலாளர் துறையினர் நேற்று ஒரே நேரத்தில் ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக, தொழிலாளர் நலத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

எடை குறைவு

அப்போது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிய பொதுமக்களிடம் இருந்த பொருட்களை வாங்கி மீண்டும் எடையை சரிபார்த்தனர். அப்போது, பெரும்பாலான கடைகளில் எடை குறைவாகவே பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்படி, மதுரையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 72 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர்.

இதில் 24 கடைகளில் எடை குறைவாக பொருட்களை வினியோகம் செய்வது கண்டறியப்பட்டது. இதற்காக ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனை எடைக்கற்கள் வைக்காத கடைக்காரர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மறுபரிசீலனை சான்று வைக்காத 4 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் சரிபார்க்கலாம்

எடைகுறைவாக வினியோகம் செய்த கடைகளில் முதல் தடவையாக இருப்பின் ஆயிரம் ரூபாய் அபராதமும், 2-வது முறையாக இருந்தால் கோர்ட்டு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்க வேண்டும். தராசுகளில் பொருட்களை எடைபோடும் போது, தராசில் காட்டப்படும் அளவு பொதுமக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும். தராசுகளில் முத்திரையிடப்பட்டு சான்று வைத்திருக்க வேண்டும். விதிகளை பின்பற்றாத கடைக்காரர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என எச்சரித்தனர். இதுகுறித்து, இணை கமிஷனர் சுப்பிரமணியன் கூறியதாவது:- ரேஷன் கடைகளில் எடையளவு தொடர்பான புகார்களை மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.பொதுமக்கள் தங்களது புகார்களை உடனுக்குடன் அனுப்ப வசதியாக டி.என்.எல்.எம்.சி.டி.எஸ். என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து புகார் தரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்