போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியின்போது தூய்மை பணியாளர் திடீர் சாவு

மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியின் போது தூய்மை பணியாளர் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2020-06-03 01:30 GMT
மதுரை, 

மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் செல்வம்(வயது 50). நேற்று இவர் சக ஊழியர்களுடன் கமிஷனர் அலுவலகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, செல்வம் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இதற்கிடையில் இறந்த செல்வத்தின் மகன் மணிகண்டன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் செல்வம் இறப்பு குறித்து ஆதிதமிழர் பேரவையின் மதுரை மாவட்ட செயலாளர் ஆதவன் உள்பட சிலர் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, செல்வம் நேற்று காலை கமிஷனர் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு கொரோனா பரவலை தடுக்கும் மருந்து அடிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் தனக்கு அந்த மருந்து அடிக்க தெரியாது என்று தெரிவித்தார். ஆனாலும் அவர்கள் வற்புறுத்தல் காரணமாக சக ஊழியர்களுடன் சேர்ந்து அந்த பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கொரோனா மருந்து அடிக்கும் போது அவர் மயங்கி கிழே விழுந்து இறந்து விட்டார். எனவே அவரது குடும்பத்திற்கு கொரோனா பணியில் இறந்து போனதற்கான சிறப்பு நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்