நெல்லை பொருட்காட்சி திடலில் தற்காலிக காய்கறி கடைகள் அகற்றம் போராட்டம் நடத்திய வியாபாரிகள் கைது
நெல்லை பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
நெல்லை,
நெல்லை பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதை கண்டித்து போராட்டம் நடத்திய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கடைகள் அகற்றம்
நெல்லையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதையொட்டி டவுன் போஸ் மார்க்கெட் மூடப்பட்டது. அங்கிருந்த வியாபாரிகளுக்கு பொருட்காட்சி திடலில் தற்காலிக காய்கறி கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள கடைகளையும் காலி செய்ய மாநகராட்சி உத்தரவிட்டது. அதாவது பொருட்காட்சி திடலில் பல கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, கொரோனா காலம் முடியும் வரை கடைகளை அகற்றக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயணன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் போலீசாரும் பொருட்காட்சி திடலுக்கு நேற்று மாலை வந்தனர்.
அவர்கள் பந்தல் போட்டு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் மற்றும் 15 வாழைக்காய் கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலையும் அகற்றினார்கள்.
வியாபாரிகள் போராட்டம்
அப்போது வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் மாலைராஜா தலைமையில் வியாபாரிகள், கடைகளை அகற்ற விடாமல் தடுத்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தபோது போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுத்தமல்லி பாரதியார் நகரை சேர்ந்த வியாபாரி முருகன் திடீரென்று அங்கு வணிக வளாக கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதைக்கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 11 வியாபாரிகளை கைது செய்து, சந்திப்பில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதை தொடர்ந்து தற்காலிக கடைகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டது. மாநகராட்சி எதிரே உள்ள கடைகளுக்கு பதிலாக கட்டப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். பின்னர் 15 கடைகளுக்கும் அதிகாரிகள் பூட்டு போட்டனர். இந்த சம்பவத்தால் பொருட்காட்சி திடலில் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா
இதற்கிடையே சந்திப்பில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வியாபாரிகள், சங்க நிர்வாகிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த மண்டபம் முன்பு மற்ற வியாபாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 7 மணி அளவில் அனைத்து வியாபாரிகளும் விடுவிக்கப்பட்டனர்.