குமரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்வு
குமரி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் குமரி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் தினமும் ஏராளமானவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகிறார்கள். அவ்வாறு வருபவர்களை மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை ஆகிய சோதனை சாவடிகளில் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். அவர்களுக்கு சளி மாதிரி எடுத்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.
பரிசோதனையில் நோய்த்தொற்று உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
மேலும் 4 பேருக்கு தொற்று
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக இருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது சென்னையில் இருந்து வந்த திருவட்டார் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஆணுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல ஆரல்வாய்மொழி வடக்கூரை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வந்திருந்தார்.
அவரை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் லாட்ஜில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது.
4 பேர் டிஸ்சார்ஜ்
மேலும் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக வந்த ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 23 வயதான வாலிபர், பெருவிளையை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பூரண குணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 4 பேரும் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குமரி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42 ஆனது.