ஜூன் மாத பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைந்ததால் ரேஷன் கடைகள் வெறிச்சோடின
நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாத பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் குறைந்ததால் ரேஷன் கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
ஊட்டி,
தமிழகத்தில்அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஜூன் மாதத்திற்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் 318 முழு நேர ரேஷன் கடைகள், 89 பகுதி நேர ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரத்து 432 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கூட்டம் சேர்வதை தவிர்க்க ‘டோக்கன்கள்’ வழங்கப்பட்டு உள்ளன.
வெறிச்சோடிய ரேஷன் கடைகள்
ஊட்டி சேரிங்கிராஸ், கோடப்பமந்து, நொண்டிமேடு, எல்க்ஹில் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டங்கள் தரையில் வரையப்பட்டு உள்ளதோடு, கைகளை கழுவ தண்ணீர், சோப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வு செய்யப்பட்டதால், நீலகிரியில் பலரும் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் அவர்கள் வேறு நாட்களில் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற மனநிலையில் உள்ளதாக தெரிகிறது. மேலும் சிலர் டோக்கன்களில் தேதிகளை தள்ளி போட கூறுகின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தினமும் 100 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது மக்கள் கூட்டம் இல்லாததால், பல ரேஷன் கடைகள் வெறிச்சோடிய நிலையில் இருப்பதை காண முடிகிறது. இதனால் பணியாளர்கள் பொருட்கள் வாங்க பொதுமக்கள் வருவார்களா? என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டு உள்ள பொருளாதார நிலைமையை சரிசெய்யும் நோக்கத்தோடு, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளில் உள்ள அனைவருக்கும் தலா ஒருவருக்கு 5 கிலோ வீதம் கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.