புளியங்குடி அருகே டிராக்டர் டிரைவர் அடித்துக்கொலை தொழிலாளி கைது

புளியங்குடி அருகே டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-02 22:15 GMT
புளியங்குடி,

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள இந்திரா காலனியை சேர்ந்த வேலு என்பவருடைய மகன் வைரவன் (வயது 45), டிராக்டர் டிரைவர். அதே பகுதியை சேர்ந்த பெரிய முனியாண்டி என்பவருடைய மகன் முருகன் (38), கூலி தொழிலாளி. இவருக்கும், வைரவனுக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரவன் மற்றும் சிலர் அங்குள்ள பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முருகனுக்கும், வைரவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் கிடந்த கம்பால் வைரவனை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வைரவனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு வைரவன் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைரவனுக்கு பூல்கனி (40) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்