சிவகங்கை மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் குறைந்த பயணிகளுடன் 80 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாட்டத்தில் கொரோனா தடையால் கடந்த 50 நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் பஸ் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்க அரசு உத்தரவிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் நேற்று காலை 6 மணிமுதல் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின. தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
சிவகங்கை பகுதியில் இருந்து சென்ற பஸ்களில் சுமார் 10 பயணிகள் வரை சென்றனர்.பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் முககவசம் அணிந்திருந்தனர். அத்துடன் பஸ்சில் சென்ற பயணிகளும் முக கவசம் அணிந்து அமர்ந்து இருந்தனர்.
பஸ் பயணிகளுக்கு கண்டக்டர்கள் கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்னர் பஸ்சில் அமர செய்தனர்.
உத்தரவு
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:- அரசு 50 சதவீத பஸ்கள் இயக்க தெரிவித்து இருந்தாலும், இந்த மாவட்டத்தில் மக்களின் தேவைகளுக்காக சுமார் 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு 9 மணிவரை பஸ்கள் இயக்கப்படும். தேவை அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.