மாவட்டம் முழுவதும் பஸ்கள் ஓட தொடங்கின வெளி மாவட்டங்களுக்கு குறைந்த பயணிகளே பயணம்

கரூர் மாவட்டத்தில் நேற்று பஸ்கள் ஓட தொடங்கின. இதில், வெளி மாவட்டங்களுக்கு குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர்.

Update: 2020-06-02 04:37 GMT
கரூர், 

கரூர் மாவட்டத்தில் நேற்று பஸ்கள் ஓட தொடங்கின. இதில், வெளி மாவட்டங்களுக்கு குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர்.

பஸ்கள் இயக்கம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 5-வது கட்டமாக இந்த மாதம் (ஜூன்) 30-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதேசமயம் தமிழகத்தில் 8 போக்குவரத்து மண்டலங்களாக பிரித்து, அதில் 2 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களுக்குள் 50 சதவீத அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி நேற்று காலை கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பணிக்கு வந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு, முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பஸ்களை பஸ்நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். கரூரில் இருந்து நேற்று நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர். பஸ் நிலையத்திற்கு வந்த சில பயணிகள், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் திண்டுக்கல், திருச்சிக்கு ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி அரசு போக்குவரத்துக்கழக கிளையில் நேற்று 19 பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக கிளை மேலாளர் தாமோதரன், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு உடல் வெப்பநிலை அளவிடப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பஸ்சுக்கும் கிருமிநாசினி வழங்கி அனுப்பப்பட்டது. பஸ்சில், பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரவைக்கப்பட்டனர்.

இதேபோல குளித்தலை, நொய்யல், வேலாயுதம்பாளையம், தரகம்பட்டி, க.பரமத்தி, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பஸ்கள் நேற்று முதல் இயங்க தொடங்கின. இதில் பயணிகள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பயணம் செய்தனர். பஸ்கள் அரசு அறிவுறுத்தலின்படி இயக்கப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்