விருதுநகர் மாவட்டத்தில் 220 அரசு பஸ்கள் இயக்கம் 20 சதவீதத்தினரே பயணம் செய்தனர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 220 போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் 20 சதவீத பயணிகளே பஸ்களில் பயணம் செய்த நிலையில் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி கிடந்தன.
விருதுநகர்,
தமிழக அரசு நேற்று முதல் 50 சதவீத போக்குவரத்து கழக பஸ்களை இயக்க அனுமதி அளித்த நிலையில் 60 சதவீத பயணிகள் மட்டுமே பஸ்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பொது போக்குவரத்துக்கு வசதியாக அனைத்து மாவட்டங்களையும் 8 மண்டலங்களாக பிரித்து உத்தரவிட்டுள்ள அரசு விருதுநகர் மாவட்டத்தை 5-வது மண்டலத்தில் இடம்பெற செய்துள்ளது. இதன் மூலம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல்லுக்கு இ-பாஸ் இல்லாமல் பஸ்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மண்டலத்தில் மொத்தம் 418 பஸ்கள் உள்ள நிலையில் நேற்று 133 டவுன் பஸ்களும், 88 புறநகர் பஸ்களும் மொத்தம் 221 பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு நிபந்தனையின்படி இந்த பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் டவுன் பஸ்களிலும், புறநகர் பஸ்களிலும் சராசரியாக 20 சதவீத பயணிகளே பயணம் செய்யும் நிலை இருந்தது. அதிலும் மதியத்திற்கு பின்னர் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
பரிசோதனை
அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்தவுடன் கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்த நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. ஒவ்வொரு முறையும் பஸ்கள் கிராமங்களுக்கு சென்று திரும்பிய பின்னரும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து கழக பொது மேலாளர் சிவலிங்கம் முன்னிலையில் பஸ் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இல்லாத ஊழியர்களே பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டனர்.
பஸ்களில் சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போக்குவரத்து கழக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
தவிப்பு
150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாவட்டத்தின் அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லாததால் இம்மாவட்ட மக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஏதேனும் சிறப்பு அனுமதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
சிவகாசி
சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், மதுரை ஆகிய ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இதேபோல் சிவகாசி நகரில் இருந்து திருத்தங்கல், நாரணாபுரம், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், ரிசர்வ்லைன் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இதனை சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது சிவகாசி பணிமனை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மார்க்கெட் அகற்றம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சிவகாசி பஸ்நிலையம், விஸ்வநத்தம் காய்கறி மார்க்கெட், காரனேசன், இரட்டை பாலம் ஆகிய இடங்களில் பிரித்து நடத்தப்பட்டது. இந்தநிலையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் அங்கு செயல்பட்ட காய்கறி மார்க்கெட் உழவர்சந்தை பகுதிக்கு மாற்றப்பட்டது. உழவர் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் பெரும்பாலான வியாபாரிகள் உழவர் சந்தைக்கு வெளியை விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.