வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2020-06-02 02:07 GMT
களக்காடு, 

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பெண் தற்கொலை

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் இந்திராநகரை சேர்ந்தவர் விவசாயி ராமன். அவருடைய மனைவி முப்பிடாதி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் முப்பிடாதிக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முப்பிடாதி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுபற்றி அவரது மகன் வள்ளிநாயகம் (24) களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடையம்

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த கீழக்கடையம் சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் பட்சிராஜன் (40). இவர் குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வந்தார். அவருடைய மனைவி திருச்சியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த மாதம் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பட்சிராஜன் கீழக்கடையம் வந்துவிட்டார்.

இந்தநிலையில் நேற்று அவரது வீட்டில் பட்சிராஜன் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவரது சட்டைப்பையில் கிடைத்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதியிருந்தது.

மேலும் செய்திகள்