தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுடன், அதிகாரிகள் செல்போனில் கலந்துரையாடல் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர வலியுறுத்தல்

குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுடன் செல்போன் மூலம் அதிகாரிகள் கலந்துரையாடல் நடத்தினர். அப்போது பயிர் காப்பீடு திட்டத்தில் சேர வலியுறுத்தப்பட்டது.

Update: 2020-06-02 00:51 GMT
கன்னியாகுமரி, 

குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுடன் செல்போன் மூலம் அதிகாரிகள் கலந்துரையாடல் நடத்தினர். அப்போது பயிர் காப்பீடு திட்டத்தில் சேர வலியுறுத்தப்பட்டது.

கலந்துரையாடல்

குமரி மாவட்டத்தில் வாழை, மரவள்ளி கிழங்கு மற்றும் மா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுடன், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி மற்றும் அதிகாரிகள் செல்போன் மூலம் கலந்துரையாடல் நடத்தினர். கலந்துரையாடலின் போது ஜெயபாரதி மாலதி பேசும் போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, ‘அக்ரி கல்ச்சர் இன்சுரன்ஸ் நிறுவனம்‘ தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாழை, மரவள்ளி, மா போன்ற பயிர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

குறிப்பாக கடும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, ஆலங்கட்டிமழை, புயல் போன்றவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும் இந்த திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

தவணை தொகை

வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு தவணை தொகையாக ரூ.3,790 செலுத்தி இழப்பீடாக ரூ.75,800-ம், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.1,225 தவணை தொகையாக செலுத்தி இழப்பீடாக ரூ.24,500-ம், மா பயிரிடும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.900 செலுத்தி ரூ.18 ஆயிரம் இழப்பீடாகவும் பெறலாம்.

கடன் பெறும் விவசாயிகளுக்கு, கடன் வழங்கும் வங்கிகள் காப்பீடு தொகையை பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தும். கடன் பெறாத விவசாயிகள் தங்களது அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் தவணைத்தொகை செலுத்தலாம்.

தேவையான ஆவணங்கள்

இந்த திட்டத்தில் சேர நிலத்தீர்வை ரசீது, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம் நகல், ஆதார் அட்டை ஆகியவை தேவை. வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு செப்டம்பர் 30-ந் தேதி வரையும், மா பயிருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி வரையும் தவணைத்தொகை செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் விமலா, சரண்யா, ஆறுமுகம், தோட்டக்கலை அலுவலர் இசக்கிமுத்து, துணை தோட்டக்கலை அலுவலர் ஞானதயாசிங், முன்னோடி விவசாயி ஹென்றி, மற்றும் 35 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்டனி எட்வர்ட் சிங் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்