முககவசம் அணியாதவர்களிடம் ரூ.60 லட்சம் அபராதம் வசூல் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாமல் வெளியே நடமாடியவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-02 00:20 GMT
சென்னை,

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவரது தலைமையில் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

அதன்பின்னர் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 1,286 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இதுவரை இருந்தது. தற்போது 14 நாட்கள் எந்த ஒரு கொரோனா பாதிப்பும் இல்லாத ஆயிரம் தெருக்கள் வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி மற்றும் சமுதாய நலக்கூடங்களில் பாதிக்கப்படாத வயதான மற்றும் வேறு உடல் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களை தங்க வைத்து தனிமைப்படுத்த தொடங்கி உள்ளோம். இந்த மக்களுக்கு சத்தான உணவு, மருந்துகள் வழங்கப்பட்டு 7 முதல் 10 நாட்கள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து தேவையான சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் முககவசம் அணியாமல் வெளியே நடமாடியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.60 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றாத சலூன்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 4 மாதங்கள் வரை அந்த கடைகளுக்கு ‘சீல்‘ வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப்பகுதிகளில் கண்காணிப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். இதன் மூலமாக சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகமாக பதிவாகிறது. அதிகப்படியான சோதனையால் அதிக பாதிப்பை கண்டறிந்து அதனை கட்டுக்குள் கொண்டு வருவதே எங்களது நோக்கம். இன்னும் 2 வாரங்களில் சென்னையில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்.? கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பது குறித்து தற்போது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வட்டார துணை கமிஷனர் பி.ஆகாஷ், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக்கழக செயல் இயக்குனர் டாக்டர் பி.கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்