மயிலாடுதுறை அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது
மயிலாடுதுறை அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறை அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
9-ம் வகுப்பு மாணவி
மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி ஒருவருக்கு திடீரென உடல் நலமில்லாமல் போனது. அந்த மாணவி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியை அவருடைய தாய் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அப்போது அந்த மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அந்த மாணவி தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தாய், மருத்துவமனையில் இருந்து நேராக தனது மகளை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
தந்தையே காரணம்
அங்கு சென்ற அவர், தனது 9-ம் வகுப்பு படிக்கும் மகள் தற்போது 2 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், இதற்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையின்போது நீண்ட நேரம் அந்த மாணவி இந்த சம்பவத்துக்கு யார் காரணம் என்று கூறவில்லை.
நீண்ட நேர விசாரணைக்குப் பின்னரே அந்த மாணவி தயங்கி தயங்கி தான் கர்ப்பம் ஆனதற்கு தனது தந்தையே காரணம் என கூறினார். அதனைக்கேட்டதும் மாணவியின் தாயார் மற்றும் விசாரணை நடத்திய போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது
இதனையடுத்து மயிலாடுதுறை மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் அந்த மாணவியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த மாணவி கூறியது உண்மை என்று தெரிய வந்ததையடுத்து இது தொடர்பாக அந்த மாணவியின் தந்தையை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.