68 நாட்களுக்கு பிறகு குறைவான பயணிகளுடன் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் வெறிச்சோடி காணப்பட்ட பஸ் நிலையங்கள்
68 நாட்களுக்கு பிறகு தஞ்சையில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் இன்றி பஸ் நிலையங்கள் வெறிச்சோடின. குறைவான பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
தஞ்சாவூர்,
68 நாட்களுக்கு பிறகு தஞ்சையில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் இன்றி பஸ் நிலையங்கள் வெறிச்சோடின. குறைவான பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
அரசு பஸ்கள் இயக்கம்
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சை கரந்தையில் உள்ள புறநகர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 30 பஸ்கள் புறப்பட்டு தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு சென்றன.
பஸ்களை இயக்குவதற்கு முன்பு பணிமனைக்கு வந்த டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் கிருமி நாசினியால் கைகளை கழுவினர். அதன்பிறகு பணிமனையில் இருந்து புறப்பட்ட பஸ்கள் அனைத்துக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
குறைவான பயணிகள்
புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு ாஸ்கள் இயக்கப்பட்டன. 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்களிடம் ஆர்வம் இல்லை. 60 சதவீத பயணிகளை மட்டுமே பஸ்களில் ஏற்ற வேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்து இருந்ததால் பஸ்களில் 32 பயணிகளுக்கு மேல் ஏற்றவில்லை.
தஞ்சை-திருச்சிக்கு இடையே இயக்கப்பட்ட பஸ்களில் மட்டுமே 32 பேர் பயணம் செய்தனர். மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் மிகவும் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர். 3 பேர் அமரக்கூடிய இருக்கைகளில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கைகளில் ஒருவரும் அமர வைக்கப்பட்டனர். பயணிகள் அமரக்கூடிய இடத்தில் சமூக இடைவெளி குறியீடு போடப்பட்டிந்தது.
வெறிச்சோடிய பஸ் நிலையங்கள்
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி, புதிய பஸ் நிலையம், பூதலூர், அம்மாப்பேட்டை, பாபநாசம், ஒரத்தநாடு உள்பட பல்வேறு ஊர்களுக்கு 51 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பஸ்களில் சிலர் மட்டுமே பயணம் செய்தனர். சில பஸ்கள் 2 பயணிகளுடனும் இயக்கப்பட்டன.
நீண்ட நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பஸ்களில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டாததால் புதிய, பழைய பஸ் நிலையங்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெரும்பாலான பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.