தொழிலாளர்கள் வருவதற்கு வசதியாக தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு ரெயில்களை இயக்க கோரிக்கை

தொழிலாளர்கள் வருவதற்கு வசதியாக கோவைக்கு தென்மாவட்டங்களில் இருந்து ரெயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-06-01 21:53 GMT
கோவை,

தொழில் நகரமான கோவையில் உள்ள தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், வணிகவளாகங்கள் உள்ளிட்டவற்றில் 1 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். கொரோனா தொற்று காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதை தொடர்ந்து கோவையில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோவையில் இருந்து உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் 45 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். இதன்காரணாக கோவையில் தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில்நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

ரெயில்களை இயக்க கோரிக்கை

கோவையை விட்டு ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் சென்று விட்டதால் தொழில்நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே கோவையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையை போக்க தென்மாவட்டங்களில் இருந்து கோவைக்கு தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு வசதியாக கோவை-தென்மாவட்டங்கள் இடையே ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர்,பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறியதாவது:-

நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அதேநேரத்தில் கோவையில் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதி இல்லை. இதனால் தென் மாவட்ட தொழிலாளர்கள் கோவைக்கு வர முடியாத நிலை உள்ளது.

தற்போது கோவையில் இருந்து காட்பாடி, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவை- மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் இடையே ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். இதன்மூலம் வேலைவாய்ப்பின்றி உள்ள தொழிலாளர்கள் கோவை வர முடியும்.

மேலும் செய்திகள்