தென்திருப்பேரையில் 25 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி சுகாதார பணிகள் தீவிரம்

தென்திருப்பேரையில் 25 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Update: 2020-06-01 21:30 GMT
தென்திருப்பேரை,

சென்னையைச் சேர்ந்த ஆண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மாவடிபண்ணைக்கு வாகனத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

இதற்கிடையே, அந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்து சென்ற தூத்துக்குடி கோவங்காடு பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 25 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 25 பேரையும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து மாவடிபண்ணை முழுவதும் தனிமைப்படுத்தி, அங்கு சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும் அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில், தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்