அரியலூர் மாவட்டத்தில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூர் மாவட்டத்தில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த இலைக்கடம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் காட்டுராஜா (வயது 37). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த குருசாமியின்(52) குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று குருசாமி, ரவிச்சந்திரன்(56), அரவிந்த்(22), அரியான் என்கிற அகிலன் (26), கபிலன்(25) ஆகிய 5 பேர், இரும்பு குழாய், உருட்டுக்கட்டை மற்றும் கத்தி ஆகியவற்றுடன் காட்டு ராஜாவின் குடும்பத்தினரை தாக்கினர்.
இந்த கொலைவெறி தாக்குதலில் காட்டுராஜா, அவரது தந்தை கந்தசாமி, மனைவி கவிதா, தம்பியின் மாமியார் ஆண்டாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் தஞ்சை, அரியலூர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக செந்துறை போலீசார் வழக்குப்பதிந்து குருசாமி, ரவிச்சந்திரன், அரவிந்த், அகிலன், கபிலன் ஆகிய 5 பேரை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
பிரபல ரவுடி
அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிழவேந்தன் தெருவை சேர்ந்த அமிர்தராஜ் மகன் வினீத் என்ற வெலிங்டன்(23). பிரபல ரவுடியான இவர் குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களை தொடர்ந்து வழிமறித்து திட்டியும், பணம் கேட்டும் மிரட்டி வந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி மாதா கோவிலை சேர்ந்தவர் சிவக்குமார்(42). இவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி, அதில் போதை பொருளை கலந்து விற்பனை செய்து வந்துள்ளார். திருமானூர் போலீசார் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 7 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இந்தநிலையில் கலெக்டர் ரத்னா, அவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் உள்ள குருசாமி, ரவிச்சந்திரன், அரவிந்த், அகிலன், கபிலன் மற்றும் வினீத், சிவக்குமார் ஆகிய 7 பேரிடமும் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்காக நகலை போலீசார் வழங்கினர். பின்னர் அவர்கள் 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே, அரியலூர் மாவட்டத்தில் 31 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.