திருச்சியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு: சிந்தாமணி அண்ணா சிலை ரவுண்டானா இடித்து அகற்றம் சுற்றளவை குறைத்து ரூ.40 லட்சத்தில் புதிதாக வடிவமைக்கப்படுகிறது
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை ரவுண்டானா இடித்து அகற்றப்பட்டது. ரவுண்டானாவின் சுற்றளவை குறைத்து ரூ.40 லட்சத்தில் புதிதாக வடிவமைக்கப்படுகிறது.
மலைக்கோட்டை,
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே சிந்தாமணி பகுதியில் 1968-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் சிலை திறக்கப்பட்டது. திருச்சி மாநகரின் அடையாளங்களில் சிந்தாமணி அண்ணாசிலையும் ஒன்றாக உள்ளது. சென்னை, விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்பட தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்து ஸ்ரீரங்கம் வழியாக வரும் வாகனங்கள் அண்ணாசிலையை கடந்து தான் சத்திரம் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தின் காரணமாக சிந்தாமணி அண்ணாசிலை ரவுண்டானா அமைந்துள்ள இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட உடனடியாக அந்த பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சிந்தாமணி அண்ணாசிலை ரவுண்டானாவின் சுற்றளவை குறைத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை தொடர்ந்து அண்ணாசிலை ரவுண்டானா நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினரால் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அதே இடத்தில் ரவுண்டானாவின் சுற்றளவை குறைத்து ரூ.40 லட்சத்தில் புதிதாக ரவுண்டானா வடிவமைக்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.