சம்பள குறைப்பை கைவிட வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சம்பள குறைப்பை கைவிட வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-01 04:47 GMT
தேனி, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந்தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு அலுவலர்கள் பணிக்கு வந்து செல்வதற்காக மாவட்டத்துக்குள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று (திங்கட் கிழமை) முதல் 60 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு மே மாதத்துக்கான சம்பளம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் கம்பம், தேவாரம், குமுளி, போடி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் நேற்று திரண்டனர். பின்னர் அவர் கள் சம்பள குறைப்பை கண்டித்து பணிமனையை முற்றுகையிட முயன்றனர். அதையடுத்து முற்றுகையை கைவிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சம்பளத்தை குறைக்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு முககவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பள குறைப்பு இல்லை என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் நடந்த உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்