வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி: கர்நாடகத்தில் ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் - பொதுமக்கள் அதிர்ச்சி

கர்நாடகத்தில் ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பு அதிகரிப்பால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-05-31 22:30 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக நேற்று 299 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,168 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.அதாவது ராய்ச்சூரை சேர்ந்த 50 வயது நபரும், பீதரை சேர்ந்த 75 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,218 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,950 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் 21 பேர், யாதகிரியில் 44 பேர், கலபுரகியில் 28 பேர், மண்டியாவில் 13 பேர், ராய்ச்சூரில் 83 பேர், உடுப்பியில் 10 பேர், பீதரில் 33 பேர், பெலகாவியில் 13 பேர், தாவணகெரேயில் 6 பேர், தட்சிண கன்னடாவில் 14 பேர், விஜயாப்புராவில் 26 பேர், உத்தர கன்னடாவில் 5 பேர், பல்லாரியில் ஒருவர், சிவமொக்காவில் ஒருவர், கோலாரில் ஒருவர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 13 ஆயிரத்து 358 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 29 ஆயிரத்து 239 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் 253 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநில அரசு மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்