கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது கலெக்டர் வினய் பேச்சு

கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என கலெக்டர் வினய் கூறினார்.

Update: 2020-05-31 02:25 GMT
மதுரை, 

கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என கலெக்டர் வினய் கூறினார்.

நிவாரண தொகுப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள ஜரிகைக்காரத்தெரு அல்மஜித்துல் கிப்லா ஜூம்மா பள்ளிவாசலில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை தாங்கி நிவாரண தொகுப்பினை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

தூய்மைப்படுத்தும் பணி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. காற்றின் மூலமாக பரவாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதால் பிற பகுதிகளுக்கு வைரஸ் பரவுவது தவிர்க்கப்படுகிறது. மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன. கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

ஊரடங்கு காலத்தில் ரேஷன்கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உரிய விலையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், காய்கறிகள் அவர்களின் வீட்டின் அருகிலேயே கிடைப்பதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புலம்பெயர் தொழிலாளர்கள்

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு உணவுப்பொருட்கள் வேண்டி வரும் அழைப்புகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை மதுரை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுப்புற கலைஞர்கள், நாடக கலைஞர்கள், ஆதரவற்றோர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர்களுக்கும் நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட மகபூப்பாளையம் பகுதியில் உள்ளோர்களுக்கு ஜமாத் ஒருங்கிணைப்புடன் 16 டன் அரிசி மற்றும் 250 கிலோ பருப்பு வீடுகளுக்கே சென்று நேரிடையாக வழங்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலங்களில் குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

சமூக இடைவெளி

மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி மற்றும் சோப்பினால் கைகளை கழுவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கலெக்டர் வினய் 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 500 கிராம் பாசிப்பருப்பு, 500 கிராம் உளுந்தம்பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய், 50 கிராம் மிளகு, 50 கிராம் சீரகம், 100 கிராம் கடுகு, 100 கிராம் பூண்டு, 250 கிராம் புளி, 100 கிராம் மசாலா பொடி ஆகிய உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 182 பேருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மேற்கு தாசில்தார் கோபி, பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்